ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ் - PointPedrO.com
Headlines News :
Home » » ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி: ராமதாஸ்

Written By KAJANTHAN JS on Saturday 2 March 2013 | 17:37




விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதாக இந்திய பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்பவேண்டியிருக்கும் என ராஜபக்ஷ மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்ஷவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது.
இதற்குப்பிறகாவது ராஜபக்ஷவின் உண்மை முகத்தை புரிந்துகொண்டு, இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும். ஆனால், சீனா பக்கம் சாய்ந்து விடக் கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்துகொள்கிறது. ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக்கொண்டு, அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ. 500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு.
ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்துவரும் நிலையில், அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதியுதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத் தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.
அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்துகொள்கிறது.
இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்புசப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்தியாவை மிரட்டும் இலங்கை ஜனாதிபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே, இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this article :

No comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. PointPedrO.com - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger